வியாழக்கிழமை, ஜூலை 19, 2018
   
Text Size

காற்றையும் அழைத்துச் சென்றவர்கள் (நஸார் இஜாஸ் )

கவிதைகளின் தளம் இன்று பல்வேறு பாத்திரங்களில் நிரம்பி வழிகிறது. அந்த தளத்தில் ஏகப்பட்ட கூறுகள் உட்கார்ந்து கொண்டு கவிதைக் குடித்தனம் செய்து கொண்டிருக்கிறது. காற்றில் அழைத்துச் செல்லப்பட்ட சொற்களைக் கண்டெடுத்து கவிதைத் தொழிற்சாலையில் அற்புதமான கவிதைகளை நெய்து கொண்டிருக்கிறார்கள் தொழிலாளர்கள்.

69641 10200423087475522_969416028_n

கவிதை எழுதுவதற்கு முதலில் கவிதை மனது இருக்க வேண்டும் என்ற கருத்தாடல்கள் ஆரம்பத்திலிருந்தே தொடர்ச்சியாக பேசப்பட்டு வந்த போதிலும் அவ்வாறானவர்களை இப்போதெல்லாம் காண்பது மிக மிக அரிதான ஒன்றாகவே மாறிவிட்டது. ஒர் உச்சமான படைப்பாளியாக இருப்பதைக் காட்டிலும் ஓர் உன்னதமான மனிதனாக இருக்க வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில்தான் ஓர் உன்னதமான கவிதைகளைப் கட்டுருவாக்கம் செய்ய முடியும். நாம் எதை நோக்கி நகர்கிறோமோ அதை நோக்கியதாகவே எமது சிந்தனைகளும் இருக்க வேண்டும்.
அப்பேற்பட்ட நிலையில் தன்னையும் ஒரு சாதாரண நபரைப் போல் இணைத்துள்ளார் மருதமுனை ஜமீல். அதாவது குழந்தைகளின் மனோநிலை எவ்வாறிருக்கிறது, அவர்களைக் கைக் கொள்ளும் விதம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை விளக்க முற்படுவதில் ஜமீல் தன்னை முழுமையாகவே தனது சொற்களினூடாக உட்படுத்தியிருக்கிறார்.
இன்றைக்குப் பெரும்பாலான கவிதைகள் அடுத்தவரை வீழ்த்தவும் தாழ்த்தவும் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவ்வாறான கவிதைகளில் வெறுமனே காழ்புணர்வு மாத்திரமே எஞ்சியிருக்கின்றன. அப்பேற்பட்ட படிமக் குவியல்களுக்குள் தன்னை ஆட்படுத்தி தனது கவிதை முகத்தை தானே சிதைக்கின்ற கவிதைகளாகவோ அன்றி மந்திரமும் மாயமும் நிறைந்த கவிதைகளாக அவை இருந்து விடக் கூடாது என்பதில் தான் மிகவும் அவதானமாக இருப்பதாக ஜமீல் தனது சொற்களினூடாக தெளிவு படுத்தியிருக்கிறார். அவ்வாறு இருப்பதாகவே எனக்கும் தோன்றுகிறது.
இதுவரை தனித்தலையும் பறவையின் துயர் கவியும் பாடல்கள், உடையக் காத்திருத்தல் போன்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ள ஜமீலின் மூன்றாவது தொகுதியே இந்த காற்றை அழைத்துச் சென்றவர்கள். மிக விரைவில் இவரது அடுத்த தொகுதியான தாளில் பறக்கும் தும்பி என்ற கவிதை நூல் வெளிவரவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
காற்றை அழைத்துச் சென்றவர்கள் தொகுதியில் உள்ள அத்தனை கவிதைகளும் முக்கியத்துவம் பெறுகின்ற போதிலும் ஜமீலின் சில கவிதைகள் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்றாகும். மூன்று தசாப்த கால யுத்தத்தின் பின் எமது சமுகம் பல்வேறு பட்ட இன்னல்களுக்கு பல்வேறு திசைகளிலிருந்தும் இன்னல்களை எதிர்நோக்கி வந்தமை யாவரும் அறிந்ததே. அவற்றையும் ஜமீல் தனது “மேலும் மேலும் இரத்தம்” என்ற கவிதையினூடாக சுட்டிக் காட்டியிருக்கிறார். குறித்த கவிதையானது கடந்த காலம் மாத்திரமன்றி, எதிர்கால சமுகத்திற்கும் தனது சமுகம் எதிர் கொண்ட துயரத்தனையும் முதுசொமாக துமந்து செல்லும் என்பதில் துளியேனும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.


போர் முடிந்த பின்னரும்
பத்திரிகை முழுவதும்
நிரம்பி வழிகிறது ரத்தம்
நாக்கைத் தொங்கவிட்டலையும்
வெறிபிடித்த நாய்களால்
கதறக் கதறக் குதறி
பிய்த்து வீசப்பட்ட
சிறுமிகளின் ஆடைகளிலிருந்து.

ஜமீலின் மற்றுமொரு கவிதையான அங்கவீனம் என்ற கவிதை எமது தேசத்தின் இன்றைய நிலையும், பொருளாதார வீழ்ச்சியையும் சுட்டிக்காட்டுகிறது. அதாவது பேருந்துகளில் அங்கவீனர், கர்ப்பினி, மதகுரு மாருக்கென இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில், அங்கவீனர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள ஆசனத்தை சுட்டிக்காட்டிப் பேசிய ஜமில், அங்கவீனமானவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள ஆசனமே அங்கவீனமாகக் கிடக்கின்றன என தனது எழுத்துக்களினூடக தெளிவுபடுத்தியிருக்கிறார்.

சொற்களில் இருக்கத்தன்மையின்றி இலகுவான கையாடலில் மெழுகுபூசப்பட்டுள்ள ஜமீலின் கவிதைகளில் அதிகமாக பேச்சுவழக்குச் சொற்கள் கையாடப்பட்டுள்ளது. உதாரணமாக முழுசித்திரியும், ஊசலாட்டம், வாது என்பனவற்றைச் சுட்டிக் காட்ட முடியும். அடுத்த மிகப் பிரதாணமான ஒரு விடயம் என்னவெனில் தான் கவிதையை அதிகமாக நேசிப்பதாகவும், கவிதை என்பது கணதியான அன்றாட வாழ்வில் ஒன்றிப் போனதொரு விடயமாக என்னுள் மாறிவிட்டது எனத் தெளிவாகக் கூறியிருக்கிறார். அவையெல்லாம் நியாயமான ஒன்றாக இருந்தாலும் கூட, இங்கு கவனத்திற் கொள்ள வேண்டிய ஒரு விடயமும் இருக்கிறது. அதை சுட்டிக் காட்ட வேண்டிய தேவைப்பாடும் அதிகமாக இருப்பதாகவே உணர்கிறேன்.
 
“ஒருவர் உன்னதமான மனிதராக இருக்கும் பட்சத்தில்தான் உச்சமான கவிதைகளைப் படைக்க முடியும் என்பது எனது அபிப்பிராயமாகும். எதற்கும் எனது நரகலைக் கிளறுவதற்கு முன்பாக நானே என்னைத் தூய்மைப் படுத்துகிறேன்.” இதில் கவனிக்கத்தக்கது யாதெனில், ஜமீல் தான் நேசிப்பதாக கூறியிருக்கும் கவிதையை ‘நரகல்’ என்ற ஒற்றைச் சொல்லாடலுக்குள் வகைப்படுத்துவது எந்த விதத்தில் நியாயப்படுத்தத்தக்கதாகும்.
தூய்மையான, தெளிவான, அனைவரும் இலகுவான முறையில் புரிந்து கொள்ளத்தக்க கவிதைகளை இவ்வுலகுக்குப் பரிசளித்துள்ள ஜமீல் நிச்சயம் இதில் சற்று கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.

இவரது காற்றை அழைத்துச் சென்றவர்கள் என்ற தொகுதியிலுள்ள கவிதைகளில் குழந்தைத்தனம், உடையும் பொம்மைகள், அவல் விற்றுச் செல்லும் அவளின் பெருந்துயர், மேலும் மேலும் இரத்தம், அங்கவீனம், கதைப்பிரதியைக் கிழித்தெறிந்த சிறுமி போன்ற கவிதைகள் மீள் வாசிப்புக்குட்படுத்தப்பட வேண்டியவையாகும். பின்னட்டைக் குறிப்பில் றியாஸ் குரானா தனது மனநிலையை உணர்வு ததும்ப வெளிப்படுத்தியிருப்பது ஜமீலின் காற்றை அழைத்துச் சென்றவர்கள் தொகுதியின் சிறப்பம்சமாகும். கவிதைக்கென்று ஒரு அரசியல் இருப்தைப் போல அரசியல் கவிதைகளும் மிகப்பரபரப்பான ஒன்றாகவே கடந்த காலத் தமிழில் பயிலப்பட்டு வந்திருக்கிறது. ஆயினும், அந்த அரசியல் கதையாடல் பெண்கள் என்றும், இனக்குழு, சிறு சமூகம் என்ற இடத்தைக் கடந்து விளிம்பு நிலையில் மிக மோசமாக பாவிக்கப்படும் சிறுவர்களின் மீது அக்கறை கொண்டிருக்கவில்லை. சிறுவர்களைக் கவனத்தில் எடுக்கவில்லையென்பது தண்டிக்கவும், போதிக்கவும் என அவர்களின் மீது அதிகாரம் செலுத்தும் வழிகளிலேயே பாவிக்கப்பட்டிருக்கிறது.

உண்மையில் ஜமீலின் கவிதைகள் அத்தனையும் சிறுவர்களோடு நடை பயின்றிருக்கிறது. சிறுவர்களின் மனநிலையைப் பதிவு பண்ணிய ஜமீலின் கவிதைகள் சிறுவர் இலக்கியத்திலும் புறக்கணிக்க முடியாத ஒன்றாகவே இப்போது மாறியிருக்கிறது. எழுதி முடித்த காலமெல்லாம் கற்பனையையும் தாண்டி யதார்த்தத்தைப் பின்னி விட்டன. இப்போதும் பின்னிக் கொண்டிருக்கின்றன. ஜமீலின் இப்பின்னல் தொடர்ந்து சமுகங்தின் இழிநிலை விடயங்களையும், இதர விடயங்களையும் வழமை போல் இயல்பாகவே காட்சிப்படுத்திக் கொண்டிருக்கட்டும். (நன்றி- தினக்குரல்)

 

 

நஸார் இஜாஸ்

 

இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்

 

 

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...17983
மொத்த பார்வைகள்...2074907

Currently are 227 guests online


Kinniya.NET