செவ்வாய்க்கிழமை, ஜூலை 17, 2018
   
Text Size

அறுவடைக் காலங்களிலும் கனவுகளுக்குள் மட்டுமே குடியிருக்கும் வண்ணத்துப் பூச்சிகள்

 11எஸ். பாயிஸா அலி.

                ஈழத்து நவீன தமிழ்க் கவிதை முன்னோடிகளான மகாகவி, நீலாவணன் ஆகியோரது கவிதைகளோடு எனக்கேற்பட்ட பரிச்சயமே தீவிரமான எனது கவி வெளிப்பாட்டுக்குக் காரணமாகியது.’’ எனக்கூறும் கலாநிதி ஏ.எப்.எம். அஷ்ரப் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறை விரிவுரையாளர்களுள் ஒருவர். இவரது முதலாவது கவிதைத் தொகுதியே “அறுவடைக் காலங்களும் கனவும்”

           2007 இலேயே இக்கவிதைத் தொகுதி வெளியிடப்பட்டிருப்பினும் எமது பிரதேச இலக்கியவாதிகளின் எழுத்துப் பங்களிப்புத் தொடர்பான ஆய்வு நூலுக்கான தேடலில்தான் சகோதரர் அஷ்ரபின் இக்கவிதைத் தொகுதியினைக் கண்டடைய முடிந்தது. அதுவும் மிகஅண்மையில்தான்.

       கிண்ணியா மத்திய கல்லூரியில் உயர்தரக் கல்வியை ஒரே காலப்பகுதியில் சமாந்தர வகுப்புக்களில் கற்றுக் கொண்டிருந்த காலங்களிலேயே இச்சகோதரரின் துடிப்பான மாணவப்பருவ இலக்கிய செயற்பாடுகள் பற்றி நன்கறிவேன். இதுதவிர இடைக்கிடையே ஞானம், மல்லிகை, பெருவெளி, படிகள் போன்ற இலக்கியசஞ்சிகைகளிலும் தினகரன் வீரகேசரி எங்கள்தேசம் போன்ற பத்திரிகைகளிலும் உதிரியாய் ஓரிரு கவிதைகள் வாசித்ததாய் ஞாபகம்.

             ஆனாலும் முழுத்தொகுப்பாய் அவரது கவிதைகளை வாசித்தபோதுதான் அவருக்குள் நிறைந்திருந்த ஊர்ப்பற்றையும், சமூகஅக்கறையையும், மனிதாபிமானத்தையும் மாத்திரமன்றி அநீதிக்கெதிராய் எதிர்வினையாற்றத் துணிந்த அவரது இன்னொரு கவிதைமுகத்தையும் தரிசிக்க முடிந்தது.

அவ்வளவாய் அடையாளப்படுத்தப்படாத இக்கவிதைமுகம் மெலிதானஆச்சரியத்தையும் திகைப்பையுங்கூடத் தராமலில்லை. ஏனெனில் உயர்பதவியும் கல்வியின் உச்சத்தகைமைக்கான பெருமுயல்வுகளுமெனத் துறைசார் தேடல்களிலேயே நாளின் கணிசமான பகுதியைச் செலவிட வேண்டிய ஒருவரால் இவ்வாறான இலக்கியச் செயற்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதென்பது சற்றுச் சிரமமான விடயமே.

சகோதரர் அஷ்ரபின் தந்தை “கலைப்பிரியன்” பரீட் அவர்களும் இலக்கியத் துறையில் ஈடுபாடு கொண்டவர் மாத்திரமன்றி திறமையான மௌலவி ஆசிரியரும்கூட. மிகக்குறுகிய காலமே அவரிடம் சமயபாடம் கற்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இன்றைய நாட்களில் உயிர்ப்பற்ற நிலையில் நிகழ்த்தப்படும் ஒருசில போதனை வகுப்புக்களைத் தற்செயலாகக் கடந்து போகிற வேளைகளிலே அந்நாட்களில் அவர் கையாண்ட கற்பித்தல் நுட்பங்களை நன்றியோடு நினைவு கூருகின்றேன். நிறைவான விளக்கங்களும் குறைவான குறிப்புகளுமாய் எல்லாத்தரப்புமாணவர்களையும் ஈர்க்கக்கூடிய முறையிலேயே அமைந்திருந்தது அவரின் கற்பித்தல்முறை. உண்மையில் பரீட்சேரின் அவசர இழப்பு கல்வித்துறைக்கு ஈடுசெய்ய முடியாத ஒன்றுதான். இத்தொகுதியைக் கூடத் தன் தந்தைக்கே சமர்ப்பிக்கிறார் கவிஞர்.

பெருவெளியின் வெளியீடாய் 64 பக்கங்களைக் கொண்டமைந்த இத்தொகுதியில் நீண்டதும் குறுகியதுமாய் 21 கவிதைகள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. கலாநிதி செ. யோகராசா முன்னுரையிலும், அப்துர் ரஸ்ஸாக் பின்னட்டையிலும் கவிஞரின் கவித்துவம் பற்றி பேசியிருக்கிறார்கள்.

தொகுதியின் முதற் கவிதை “திருமலை”.    போர்க்காலத் துயர்களில் முதன்மையானது தாய்மண்ணின் சிதைவல்லவா. குறித்த காலப்பகுதியில் கொலை, கொள்ளை, பழிவாங்கல், ஆட்கடத்தலெனத் திருமலை மண்ணின் சிதைந்துபோன சமூக அரசியல் நிலையை, வாழ்க்கைத் தரத்தின் வீழ்ச்சியை, தான் கண்ட ,கேட்ட, அனுபவித்தகொடுமைகளை, பாதுகாப்புக் கெடுபிடிகளைப் பற்றியெல்லாம் “திருமலை” கவிதையில் மட்டுமன்றி அடுத்தடுத்து வரும் வேறுசில கவிதைகளிலும் பேசுகிறார். கவிஞர்.

சாந்தி நகரம் சாம்பலாகி சமாதியாயிற்று

    எனும் வெறுமை படர்ந்த வலியோடு தொடங்கும் இக்கவிதையின் அடுத்தடுத்த வரிகளில்

உலகம் போற்றும் இரண்டாம் துறைமுகம்

ஊற்றெடுக்கும் வெந்நீர்க் கிணறுகள்

ஆற்றொழுக்காய் அமைந்த கடற்கரையெனத்

   திருகோணமலையின் அழகும் அருமையும் வர்ணிக்கப்பட்டிருக்கும் முறை நமக்குத் தரும் பரவசத்தை இறுதி வரிகளான

   அற்றைத் திங்களில்  பழைய சந்தியின்

 முன்னால் அமர்ந்திருந்த புத்திபரான் பாத்திருக்க  

எமது திருமலை நகரம் எரியுண்டு போனது.    எனும் கேவல் சட்டென வடிந்துவிடச் செய்கின்றது.

மே புதுங்கே தேசயய்?” என்னும் கவிதையிலும் மருங்குகளங்கிலும் புதிது புதிதாய் பூக்கத் தொடங்கியிருக்கும் புத்தர் சிலைகளைப் பார்த்து

தங்களை மனிதர்களாய் அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொள்ள

 மழைக்கு முளைத்த காளான்களாய்

 வீதியோரத்திலும் முச்சந்திகளிலும்  புத்தர் சிலைகள்

என்கிறார் கவிஞர்.

எல்லாவற்றையும் எரித்தபடியே முன்தொடர்கிற ஊழிக்காலமிதை எதுவும் பேசாமல் பார்த்துக் கொண்டேயிருக்கும் புத்தபெருமான் உயிர்த்தெழுவதெல்லாம் அவர் அமர்ந்திருக்கும் அரசமரத்தில் கூடிக்களிக்கும் பறவைகள் எச்சமிடும் அந்தவொரு கணங்களில் மட்டுந்தான்” என்னும் இன்னொரு கவிஞனின் வரிகளே இக்கணத்தில் நினைவுக்கு வருகிறது.

தாகந்தீரக் கற்று பட்டம் பெற்று

ஓடியுழைத்தும் என்ன பயன்

என்றென்றும் கடன்.

என நிகழ் வாழ்வின் சலிப்பினைப் பேசுகிறது. உழைப்பு கவிதை.

நாளை நலமென்பார்

 வீண் பாலையென்பேன் நான்

 உண்மைதான். அடிக்கடி மாறும் அரச இயந்திரங்களின் பொருளாதாரத் திட்டங்கள் யாவும் தாம் சார்ந்தோரின் பொருளாதார மட்டத்தை உயர்த்தவும் வளப்படுத்தவும் மட்டும்தானா என்னும் கனமானவினா சாதாரணர் மத்தியிலும் எப்போதோ எழத் தொடங்கிவிட்டது இல்லையா.

இல்லறம் என்பதன் பூரணமே இல்லம் நிறைந்திருக்கும் மழலை மொழிகளிலல்லவா. ஒரு குழந்தைக்கான ஏக்கத்தையும் அது கைகளில் தவழுகிற வேளை மனங்கொள்ளும் பரவசச் செருக்கையும் ஓர் அழகிய மழலை ஓவியம்போல மனதிற் பதித்துக் கொள்கிறது. “ஸ்நேகா” என்னும் கவிதை.

அடுத்து காவலரையும் காவலரைத் தம்பேனாமுனையில் காவல் செய்யும் நாவலரையும் பற்றி எள்ளற்சுவையோடு பேசுகிறது காவலரும் நாவலரும் கவிதை.

மண்ணைப் பொன்னாக்கி கல்லைக் கனியாக்கும்

 மாயம் உண்டென்று மனதைப் பிழிபவரும் .............

காதில் பூ வைத்த கையாலாகாதவராய்

 தமையெண்ணி முழுப்பூசனிக்காயை சோற்றிடை வைப்பவரும்

கவிஞரின் பார்வையில் சுயநல அரசியல் சார்ந்தோரன்றி வேறு யாராய் இருத்தல்கூடும்.

அடுத்து பயணம் கவிதை. இக்கவிதை நேர்ப்பொருளில் எமக்குத் தரும் காட்சி ஒரு பஸ் பயணமெனினும் அதன் வரிகளுக்குள் உள்ளுறைந்து கிடப்பது வாழ்வெனும் நீள்பயணம் பற்றிய விவரிப்புக்களும் விசாரிப்புக்களுமே.

சாதாரண வண்டியிலா

 அரைச் சொகுசு வண்டியிலா

எதிலும் ஆரம்பிக்கலாம். அது அவரவர் வசதியைப் பொறுத்தது.

எப்படியாயினும் பயணம் முடியவும் முடியலாம்

 இடையிலும் நிற்கலாம் அது மட்டும் நம் கையில் இல்லை.

      உண்மைதான் இதில் யாருக்குண்டு மாற்றுக் கருத்து? வாழ்வெனும் பெரும் பயணத்தின் முடிவுகள் நம் கையில் இல்லைதானே. நான் திரும்பத் திரும்ப வாசித்த அருமையான தத்துவம் சார் கவிதைபயணம்”

இன்னொரு பயணக் கவிதை “காதல்” நெரிசல் மிக்க பஸ் பயணமொன்றில் தான் கண்டு முகஞ்சுழித்த காட்சியொன்றின் விபரிப்பே இக்கவிதை

கலாசார விழுமியங்கள் மெல்ல மெல்ல குறைந்துபோகுமிந்நாட்களில் பல தருணங்களில் மனிதருக்கும் மிருகங்களுக்கும் வேறுபாடேயில்லாமற் போய் விடுகிறது.

நான்கே சுவருக்குள் நடப்பதெல்லாம்

நாற்பதுபேர் முன்னிலையில் நடந்தேற  

ஆதாமும் ஏவாளும் போலாகி ................

பூச்சாகிப் புழுவாகிக் கண்ணிருந்தும் குருடானோம்................

      

ஆனாலும் அகிலத்தை உயிர்ப்பித்த எம் ஆதித்தாயும் தந்தையும் அப்படியொன்றும் ஒழுக்கத்தில் வழுக்கியவர்களல்லவே.......

தொகுப்பின் உணர்வுபூர்வமான கவிதைகளில் ஒன்று “காத்தாயி” திருமலை நகரின் பெரும்பாலோருக்கு மிகவும் பரிச்சயமானவள்தான் இக்காத்தாயி. மேலோட்டமாய் நோக்குகையில் தனி நபரொருவர் தொடர்பான நேர்வர்ணனை போலத் தெரியும் இக்கவிதை எம் உணர்வுகளுக்குள் இறக்கிச் செல்லும் கீறல்கள் மிகஆழமானது.

பெண்மனம்மிகவும்மெலிதானது.நுண்மையானது.விசித்திரமானதுங்கூட பட்டுப்போன்ற அதன் இழைகளை என்னமாய் சிதைத்துவிடுகிறது இக்கேடுகெட்ட சமுதாயம். மிகப்பரிதாபமாய் இரத்தக் கசிவுகளோடு அறுந்து தொங்கும் அம்மென்னிழைகளுக்குக் களிம்பிட மறந்து மென்மேலும் தமது கோரநகங்களால் வராண்டி வராண்டி காயப்படுத்திக் கொண்டே இருக்கிறது. ஆற்றுப் படுத்துகை, உளவாத்துணை, மனநல மருத்துவம் என்பதெல்லாம் வெறுமனே ஒரு பட்டத்திற்கான கற்கையளவில் மட்டுமேயென்றாகி விட்டது. ஒரு ஏளனச் சிரிப்பையோ அல்லது நெற்றியையும் உதட்டையும் சுழித்தபடியான ஒரு அருவருத்த பார்வையையோ உதிர்த்தபடி. எத்தனை காத்தாயிகளைத்தான் எவ்வாழ்வெனும் நீள் பயணத்தில் கடந்துவிட்டிருக்கிறோம்.

தொடர் போராலும் சுனாமி போன்ற இயற்கை அழிவுகளாலும் மாறிமாறித் தாக்கப்பட்ட இந்நகரில் எத்தனையோ அரச, சர்வதேச தொண்டு நிறுவனங்களின் பார்வைகள் குவியங் கொண்டிருந்துங்கூட, விடுதியறையுடன் கூடிய வேலைத்திட்டங்கள் ஏன் முன்னெடுக்கப்படவில்லை? ஆகக்குறைந்தபட்சம் உள்ளுர் மருத்துவ மனைகளில் “மனநலப்பகுதிகள்” ஏன் உயிர்ப்போடு தொழிற்படுவதில்லை. காலத்துக்குக் காலம் இத்தறைகளில் பயிற்றுவிக்கப்படும் மருத்துவர்களெல்லாம் எங்கே போய் ஒழிந்து கொள்கிறார்கள்? வீதிக்கு வந்த காத்தாயிகள் மறைக்கப்பட்ட நிலையில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பதை ஏன் கண்டு கொள்ளாதிருக்கின்றோம்? இவர்களுக்கான புணர்வாழ்வு முயற்சிகள் மிக அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டாமா? “பரட்டைத் தலையும் பழைய பேணியும் முறிந்த தும்புக் கட்டையுமாய் குப்பைகூழம் கூட்டித் திரியும் காத்தாயிகளை மறுபடியும் குத்துவிளக்குகளாக்குவது யார் பொறுப்பு?

என்னளவில் சமூகத்திற்கான ஆயிரம் ஆயிரம் கேள்விகளையும் வீசியெறிகிறாள் இக்காத்தாயி.

இயற்கையையும் இலக்கியத்தையும் ஒரு சேரக்காதலிக்கும் கவிமனசு பற்றிப் பேசுகிறது. “நான்” கவிதை

பிரான்சியப் பெருங்கவி போத்லெயர்

 குழந்தைக்கவி சேஸ்பியர் ரெம்போ ...

ஜேர்மனியக் கவி லெக் எஸ்ராலூயிஸ்ட் பவுன்ட்

அவர்களைப் போல் கந்தானைகளிலும்

காலிமுகத்திடலிலும் தனிமையில் அலைய ஆசைப்படுபவன்

இதையதான் கவிஞர் நபீலும்கூட

நேற்று முழுசாய் பப்லோ நெருடா

 குறித்தே பேசினாய்

சேரனைப் பற்றியும் ஒருநூறு கவிதைகள் சொல்லியிருக்கிறாய்

முதலில் நம் சோலைக்கிளி

காகம் கலைத்த கனவுகளில்  வந்து போனார்.

 பலஸ்தீனம் பற்றி நுஃமானோடு பேசவிட்டாய்.

 

எனத் தனக்குப் பிடித்த கவிஞர்களைப் பட்டியல்படுத்துவார்.உண்மைதான் கடலோரங்கள் காற்று வாங்க மட்டுமல்ல. கலையியக்க செயற்பாடுகளுக்குங்கூடத்தான் என்பது நமது படைப்பாளிகளின் அசையா நம்பிக்கைபோலும். ஆனாலும் கொலைவெறி மிகைத்துவிட்ட துர்ப்பாக்கிய தேசத்தில் உப்புக் காற்றிலும் கந்தகம் மணக்கிறதே. பாவம் நம் கவிஞர்கள்.

மாவிலாற்றின் பெயரால் மீண்டுமொருமுறை சொந்த மண்னைவிட்டுத் துரத்தப்பட்ட மூதூர் மக்களின் அவல நிலையைப் பற்றிப் பேசுகிறது. “மீண்டுமொருமுறை” எனும் கவிதை. இதைப்போலவே நாடும் நமது விதியும், எல்லை கடத்தல், நண்ப போன்ற பல கவிதைகளில் இனவன்முறை தொடர்பான பதிவுகளே விரிவாக்கப்பட்டிருக்கின்றன.

சற்று வித்தியாசமாக சிங்களத்தால் சிரித்த இங்கிதமான சீருடைக்காரன் பற்றிப் பேசுகிறது. “வாழ்க அவன்பாணி” கவிதை. அன்புடைத்ததே தழைக்குமென்பது இதுதானோ!

வெளிப்பாட்டு ரீதியில் நவீனத்திற்குரிய தேர்ந்த மொழிகளோடு தனித்துத் தெரிகிறது. “அறுவடைக் காலமும் கனவும்” எனும் இறுதிக்கவிதை. கவிஞர் தனது அனேகக் கவிதைகளில் வலிந்து இணைத்திருந்த எதுகை,மோனை ஓசைப்பண்புகளை மெல்லக் கழற்றிவிட்டுச் சொற்களைச் சுயமாகவும் சுதந்திரமாகவும் இயங்க விட்டிருக்கிறார் இக்விதையில்.

     “நினைவுகளில் தோன்றிய வண்ணத்துப் பூச்சிகள்” அழகான படிமம். எல்லோருடைய வாழ்விலும் ஏதாவதொரு தருணத்தில் நினைவூகளில் தோன்றிக் கனவாய்க் குடிகொண்டிருக்கும் வண்ணத்துப் பூச்சிகள் இறக்கை விரித்தேயிருக்கும். கால அழுத்தத்தின் மனத்தின் அடியாழத்திற்குள் அமிழ்ந்துபோன அவ்வண்ணத்துப் பூச்சிகள் எப்போதாவது வெகுஅபூர்வமாய் இவ்வாறான வரிகளை வாசிக்கையில் சட்டென நினைவுகளில் மேலெழுந்து தன்நிறங்களை வெளியெங்கும் உதிர்த்தபடி படபடப்பதை எவராலும் தவிர்த்திட இயலாதுதானே.

உயிர்ப்பும் உணர்வும் நிறைந்த இக்கவிதை போன்றவற்றிற்கோ அல்லது அதிலும் மேம்பட்டதானவைகளுக்கோ கவிஞர் தொடர்ந்தும் முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் இவர்போன்ற துறைசார்ந்தோரால் தமிழ்க்கவிதைப் பரப்பு மென்மேலும் விரிவும் செழுமையும் பெறும்.

இறுதியாக

நகர மண்டபம் நிரம்பி வழிந்தது

மங்கல விளக்கு சுடரொளி தந்தது

தலைவனும் வந்தார்

தன்னுரை தந்தார்.

கனவில் அந்தப் புத்தகம் வந்தது’’

 

என்னும் இச்சகோதரரின் நினைவிலிருக்கும் கனவு வெகுவிரைவில் நனவாக என் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.


 

நூல் - அறுவடைக் காலமும் கனவும்
நூலாசிரியர் - திருமலை ஏ.எப்.எம். அஷ்ரப்
தொலைபேசி - 0773081120
மின்னஞ்சல் - இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்
வெளியீடு - பெருவெளி பதிப்பகம்
விலை - 150

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...16376
மொத்த பார்வைகள்...2073300

Currently are 231 guests online


Kinniya.NET