ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 22, 2018
   
Text Size

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவத்தின் பொறுப்பும் கட்சி மறுசீரமைப்பும்


Majority-of-SLMC-to-support-common-candidate-Maithri-www.gossipsinhalanews.comறஊப் ஹகீம் அவர்கள் பாரிய சமூக பொறுப்புக்களை சுமந்தவராக இருக்கின்ற தருவாயில் இன்று நகர அபிவிருத்தி, நீர்வள முகாமைத்துவ அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்துள்ளார். SLMC இன் தேசிய தலைவர் என்ற வகையிலும் முஸ்லிம் சமூகத்தின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றுள்ள கட்சியின் பொறுப்பு வாய்ந்த நபர் என்ற ரீதியிலும் கடந்த காலங்களில் விட்ட தவறுகளுக்கு தொடர்ந்து இடமளித்தால், கட்சியையும் அதனை நம்பி நிற்கும் மக்களையும் காப்பது முடியாத காரியமாகிவிடும். மேலும், குறுங்காலத்துக்கான இப்பதவியை எதிர்வரும் பொதுத் தேர்தலுக்குப் பின்னரும் தக்கவைத்துக் கொள்வதற்கான முயற்சியின் மூலம் நல்ல பலன்களைப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், அஷ்ரபின் மறைவுக்குப் பின்னரான கடந்த ஒன்றரை தசாப்த காலத்தில் துறைமுகங்கள் மற்றும் தொலைத் தொடர்புகள் அமைச்சராகவும் நீதி அமைச்சராகவும் இருந்து மிகக் குறைந்தளவான அபிவிருத்திகளைத் தான் செய்திருப்பதாக மக்கள் கருதுகின்றனர். உரிமைகளைக் கூட இவரால் பாதுகாக்க முடிந்ததா என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் குறுகிய காலத்தில் பல்வேறு சாதனைகளைச் செய்தார். அவரது வெற்றிகரமான செயற்பாடு குறித்து டி.பி.எஸ்.ஜெயராஜ் பின்வருமாறு குறிப்பிடுகிறார். 15 வருடங்களாக அஷ்ரப் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்த காலத்தில் அவரின் இலட்சிய வீறும் சாதிக்கும் ஆற்றலும் காரணமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பற்பல சாதனைகளை கண்டது. இவரது வசீகரம், அரசியல் நிலைமைகளை சரியாகக் கணக்குப் போடும் திறன், அர்ப்பணிப்பு, ஒரு தலைவருக்குரிய பண்பு ஆகியவற்றின் காரணமாகவே பல காலமாக புறக்கணிக்கப்பட்டு வந்த கிழக்கு முஸ்லிம்களை தனித்து இயங்கக் கூடிய ஒரு சக்தியாக உருவாக்கவும் வரலாற்றில் குறிப்பிடப்படும் மோஸஸ் அல்லது மூஸா நபி போன்று வனாந்திரத்தின் ஊடாக ஓர் இலட்சிய தேசத்தை நோக்கி இவர்களை இட்டுச் செல்லவும் முடிந்தது. 1994இல் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொங்கு நாடாளுமன்றம் அமைந்த நிலையில் சந்திரிக்கா குமாரதுங்க அரசாங்கத்தை நிறுவுவதில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆக்கபூர்வமான முறையில் 'குயின் மேக்கர்' பாத்திரத்தை வகித்தது. அஷ்ரப் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து புனர்வாழ்வு அமைச்சராக வந்தார்.

மேலும் பழீல் குறிப்பிடும் போது இலங்கையின் அரசியலில் சேவையின் சிகரமாகத் திகழ்ந்தார். இன, மத, பிரதேச வேறுபாடுகள் இன்றி இலங்கையர் என்ற அடிப்படையில் பொதுஜன ஐக்கிய முன்னணியால் கிடைக்கப் பெற்ற சிறந்த அமைச்சுப் பதவியினூடாக சேவைகளைச் செய்தார். ஏழைகளின் இல்லங்களை நோக்கிச் சென்ற அஷ்ரப், அவர்களின் தேவைகளைப் பல வழிகளிலும் பூர்த்தி செய்தார். இலங்கை வாழ் முஸ்லிம்களின் கல்வி நிலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் வகையில் 23.10.1995 இல் தனது முழு முயற்சியினால் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினை உருவாக்கினார். இது போன்றே ஒலுவில் துறைமுகம் என்பது அவரது கனவாக இருந்தது.

தமிழ், முஸ்லிம் மக்களின் உறவு தொடர்பில் மிகவும் உன்னிப்பாக செயற்பட்டவர். அண்ணண் அமிர்தலிங்கம் ஈழம் பெற்றுத் தராவிட்டால் தம்பி அஷ்ரப் பெற்றுத் தருவார் என்று கூறி இருந்தமை அக்காலத்தின் தேவையாகக் காணப்பட்டது. அதுபோன்றே தமிழ் இயக்கங்களை அனுசரிக்காத எந்த ஒரு தீர்வும் தீர்வாகாது எனக் கூறியிருந்தமை அவர் ஒரு சமாதானப் பிரியர் என்பதை சுட்டுகின்றது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு இனவாதக் கட்சி என பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் கருத்துக்கள் தெரிவித்ததனால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள்ளிருந்தே தேசிய ஐக்கிய முன்னணி எனும் கட்சியை ஆரம்பித்தார். அதுமட்டுமன்றி சிங்கள இனத்தவரான அசித்த பெரேரா என்பவருக்கு நாடாளுமன்ற ஆசனத்தை வழங்கி தான் ஒரு இனவாதியல்ல என்பதை நிரூபித்தும் காட்டினார். அஷ்ரபின் மரணத்தைத் தொடர்ந்து முஸ்லிம் காங்கிரஸிற்குள் ஏற்பட்ட பிளவுகளும் சர்ச்சைகளும் அஷ்ரபின் இலட்சியப் பயணத்தை தொடர்வதற்கு தடைக்கற்களாக அமைந்தன.

அஷ்ரபுடைய காலத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே முஸ்லிம்கள் பெருமளவான அச்சுறுத்தல்களை எதிர்நோக்கினர். அவருடைய மறைவுக்குப் பின்னர் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்ற றஊப் ஹகீம் அவருடைய காலத்தில் வடகிழக்குக்கு வெளியிலுள்ள முஸ்லிம்களும் அச்சுறுத்தல்களை எதிர்நோக்குகின்றனர்.

கடந்த வாரம் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் பின் கட்சி உள்ளக ரீதியான சிக்கலில் இருக்கும் நிலையிலும் முஸ்லிம்களுக்கு எதிரான அண்மைய போக்குகளுக்கு மத்தியிலும் அமைச்சர் ஹகீம் எவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ளப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். மேலும் இவர் பிரதி அமைச்சுப் பதவி குறித்தும் கவனமாக முடிவையும் தெரிவையும் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். முஸ்லிம்களுக்கு எதிரான அண்மைய கலவரங்களின் பின்னர் முஸ்லிம்களின் பிரச்சினைகளை சர்வதேச மயப்படுத்த முயற்சி செய்ததுடன் உள்நாட்டில் ஆளும் தரப்பினருடனும் முடிந்தவரை தனது சமூகத்துக்காக முரண்பட்டார். தனது இராஜதந்திர செயற்பாடுகளின் ஊடாக சர்வதேச சமூகத்தின் அக்கறையை இலங்கை முஸ்லிம்கள் மீது திருப்புவதில் வெற்றி கண்ட தலைவராக திகழ்ந்தார். எவ்வாறாயினும் கட்சியின் தனித்துவத்தை பாதுகாத்து பெரும்பான்மை முஸ்லிம்களின் ஆதரவைப் பெற்ற ஒரு தனிப்பட்ட முஸ்லிம் காங்கிரஸை குரலாக ஒலிக்கச் செய்வதில் கடின பிரயத்தனத்தை எடுத்துக் கொண்டவராகக் கருதப்படுகின்றார். குறிப்பாக அண்மைய ஜனாதிபதித் தேர்தல் காலத்தின் போது தனது அரசியல் அனுபவம், சமூக அரசியல் நிறுவனத்தைப் பாதுகாப்பதற்கான தந்திரோபாயம் போன்றவற்றினூடாக கட்சி பிளவுபடுவதை தடுத்து நிறுத்திய ஒரு சிறந்த தலைமைத்துவமாக எல்லோராலும் பார்க்கப்படுகின்றார். இவரது தலைமைத்துவத்துக்குக் கட்டுப்பட்டு ஜனாதிபதித் தேர்தல் விவகாரத்தில் எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற முடிவினை தலைவரே எடுக்க வேண்டும் என்ற நிலைக்கு கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள் ஒருமித்த நிலைப்பாட்டை வெளியிட்டமை அவர்கள் குறித்து பெருமைப்பட வேண்டிய ஒரு செய்தியாகும்.

மேலும், கட்சி இன்று தொய்வுக்குள்;ளாகி இருக்கும் சூழலில் பல்வேறு மறுசீரமைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அதில் தலைமைத்துவத்துக்கு பாரிய பொறுப்புக்கள் உண்டு. அவை குறித்து பின்வருமாறு நோக்கப்படுகின்றது.

சமகாலத் தொய்வுகள்

• பல கட்சிகளாகப் பிளவுபட்டுச் செயற்படுகின்றமை, தொடர்ந்து கொண்டிருக்கும் உள்ளக முரண்பாடுகள், கட்சி உறுப்பினர்களுக்கிடையில் முறையான ஒருங்கிணைப்பு இல்லாதுள்ளமை.

• அரசியல் பிரதிநிதித்துவத்தினை உறுதி செய்தவற்கு தெளிவான வேலைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படாமை. குறிப்பாக திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் கட்சியின் நிலையினைப் பலப்படுத்துவதன் மூலமும் தெளிவான பிரதிநிதித்துவக் கொள்கை ஒன்றினை நடைமுறைப்படுத்துவதுடன் கட்சியின் பிரதிநிதித்துவத்தினை மூன்றுக்கு குறையாததாகப் பேணிக்கொள்ள முடியும்.

• கட்சி தலைமை தொடர்பாக இருக்கின்ற விமர்சனங்கள். இவ்விமர்சனங்களைப் போக்குவதற்கு கட்சியில் திறந்த செயற்பாடுகள் எதுவும் நடைமுறைப்படுத்தப்படாத ஒரு குறை இருக்கிறது.

• கடந்த காலத்தில் கட்சியின் அரசியல் பிரதிநிதித்துவப் பங்கீடு முறையாக இடம்பெறவில்லை என்றதொரு குற்றச்சாட்டு உள்ளது. குறிப்பாக சம்மாந்துறைத் தொகுதி எவ்வித பிரதிநிதித்துவத்தினைப் பெற்றிராத நிலையில் நிந்தவூர் பிரதேசத்திற்கு இரு பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருக்கின்றமை.

• சுனாமி அனர்த்தம், அதன் பின்னரான நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் காத்திரமான போதுமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

• தேர்தல் காலங்களில் அரசாங்கம் தொடர்பான எதிர் பிரச்சாரங்களைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் கட்சியின் வாக்கு வங்கியினைப் பேண முடிந்த போதிலும் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றக் கூடியவிதத்திலானதொரு இடத்தினை அரசாங்கத்தில் பெறமுடியவில்லை. அரசாங்கத்தின் தொடர்ச்சியான புறக்கணிப்புக்கள் இதனையே வெளிப்படுத்துகின்றன.

• அரசியலமைப்புக்கான 18ம் திருத்தத்திற்கு ஆதரவு வழங்கியதன் மூலம் இலங்கையின் அரசியல் வரலாற்றில் முஸ்லிம் காங்கிரஸ் மாபெரும் தவறிழைத்துள்ளது என்றதொரு விமர்சனம் பரவலாக உள்ளது. முஸ்லிம் காங்கிரசின் எதிர்காலத்திற்கு இவ்வம்சம் பாதிப்பினைத் ஏற்படுத்தத்தக்கது. இது தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவு, அதற்கான உடன்பாடுகள், அதன் பின்னர் ஏற்பட்டிருக்கின்ற நிலை என்பவற்றினை நோக்குகின்றபோது பெரிய பிரதியுபகாரம் எதனையும் அரசாங்கத்திடமிருந்து கட்சி பெற்றிருப்பதாகத் தெரியவில்லை.

• திவிநெகும சட்டமூலம் விடயத்தில் கட்சி தெளிவான கொள்கையினைக் கொண்டிருக்கவில்லை. குறித்த சட்ட மூலத்திற்கு எதிரான கருத்துக்கள் மக்களுக்கு வெளிப்படுத்தப்பட்ட போதும் மாகாண சபைகள் மற்றும் பாராளுமன்றத்தில் குறித்த சட்ட மூலத்தினை கட்சி ஆதரித்திருந்தது.

• மாற்று முஸ்லிம் அரசியல் கட்சிகளை மற்றும் தனிநபர்களை எதிர்கொள்வதற்கான தெளிவான வேலைத் திட்டம் ஒன்றினை கட்சி கடைப்பிடிக்கவில்லை.

• ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் முக்கிய புள்ளியினரை இராஜதந்திர ரீதியில் வெற்றிகொள்வதில் தோல்வி கண்டிருக்கின்றமை.

• இலங்கையில் மிக அண்மைக் காலமாக தீவிரமடைந்துவரும் முஸ்லிம்களுக்கு எதிரான மத வன்முறைகள் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் குறிப்பிட்டுக் கூறக்கூடிய சில பணிகளை ஆற்றியிருக்கின்ற போதிலும் அக்கலவரங்களை முற்றுமுழுதாகத் தடுப்பதில் தோல்வி கண்டிருக்கின்றது. அதிலும் குறிப்பாக நீதியமைச்சினைக் கொண்டுள்ள கட்சியினால் இப்பிரச்சினையினை அரசாங்கத்திற்குக் கொண்டு சென்று தீர்வினைப் பெறமுடியாமல் இருந்துள்ளது.

• கட்சியின் இருப்பினைப் பாதுகாக்க வேண்டும் என்ற அபிப்பிராயத்தினை கட்சியின் தலைமை கொண்டிருப்பதிலிருந்து கட்சிக்குள் உள்ளக இணக்கமின்மை நிலவுகின்றமை சமூகயப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் அரசியல் ரீதியான நெருக்கடிகளை கட்சி எதிர்கொள்வதற்கு இவ்விடயம் சவாலாக அமையக்கூடும். கட்சியின் குறிப்பிட்ட சிலரின் தனிநபர் அரசியலுக்காக சமூகத்தின் அரசியலைப் பாதிப்புறச் செய்தல் என்ற நிலைக்கு கட்சி தள்ளப்பட்டுள்ளது.

• ஊடகங்களுக்கு செய்திகளை வெளியிடுகின்றபோது கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் தங்களுக்கிடையே முரண்பாடான கருத்துக்களை வெளியிட்டுள்ளமை.

• பல்வேறு பிரச்சினைகளின் போது கட்சியின் தலைமைத்துவம் அதன் உறுப்பினர்கள் மீதும் உறுப்பினர்கள் கட்சித் தலைமைத்துவம் மீதும் குற்றம் சாட்டுகின்ற, பொறுப்புச் சாட்டுகின்ற நிலை தொடர்கின்றமை.

எதிர்காலத்தில் கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய விடயங்கள்

• கட்சிக்கென தெளிவான கொள்கை இலக்குகளையும் தூர நோக்கினையும் தற்காலத்திற்கு ஏற்ற விதத்தில் மாற்றியமைத்தல்.

• கட்சியின் அதிகாரப் பணிநிலை ஓட்டம் மேலும் பரவலுரச் செய்யப்பட வேண்டும்.

• புலைமையாளர்கள், சட்டவல்லுனர்களின் ஆதரவு கட்சியில் உட்பாய்ச்சப்பட வேண்டும்.

• தனிநபர் அரசியலுக்கு முன்னுரிமையளிக்காது சமூக நலனுக்கு முதன்மையான இடம் வழங்கல்.

• கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் இணைந்து கட்சியின் தலைமைத்துவத்தினைப் பலப்படுத்துவதன் மூலம் தனிநபர் அரசியலை முடிவுக்குக் கொண்டுவரல்.

• கட்சியில் கூட்டுச் செயற்பாடுகளை ஊக்குவித்தல்.

• கட்சியின் செயற்பாடுகள், கொள்கை வேலைத்திட்டத்தினை மக்கள் மயப்படுத்துதல்.

• கட்சியின் அடிமட்ட குழுக்களின் தொடர்ச்சியான செயற்பாட்டினை உறுதி செய்தல்.

• கட்சியின் பாராளுமன்ற, மாகாண மற்றும் உள்ளுர் மன்ற பிரதிநிதிகள் ஒருமித்த கொள்கையில் செயற்படல்.

• தமிழ் - முஸ்லிம் மற்றும் சிங்கள உறவு விடயத்தில் கட்சி கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

• கட்சிப் பிரதிநிதிகள் மத்தியில் கூட்டுப் பொறுப்பினை ஏற்படுத்துவதற்கான சட்ட விதிகளை உருவாக்குதல்.

• அரசியல் தீர்வுக்கான முஸ்லிம்களின் அபிலாசைகள் என்ற விடயத்தில் கட்சி தெளிவான வேலைத்திட்டம் ஒன்றினை வகுக்க வேண்டும். அதற்கான சமூக அங்கீகாரத்தினைப் பெறுவதற்கும் கட்சி முயற்சிக்க வேண்டும்.

• கட்சியின் செயற்பாடுகள், முக்கிய தீர்மானம் எடுத்தல் போன்றவற்றின் போது புலைமையாளர்களின், கல்வியியலாளர்களின் பங்கேற்புடனான திறந்த கலந்துரையாடல்களை மேற்கொள்ளுதல்.

• கட்சியின் ஒழுக்கக் கோவை, நெறிகளை தற்காலத்திற்கு ஏற்ற விதத்தில் மறுசீரமைப்பதுடன் தேசிய அரசியல் நீரோட்டத்தில் முஸ்லிம்களின் அடையாளம் சிதைந்து விடாது பாதுகாக்கத்தக்கதான மத்தியதர கொள்கை ஒன்றினை வகுத்து அதன்பால் செயற்படல்.

• கட்சியின் அபிவிருத்தி மற்றும் ஏனைய செயற்பாடுகளின் போது எல்லாப் பிரதேசங்களும் கருத்திற்கொள்ளப்படத்தக்கதான அணுகுமுறை ஒன்றினைக் கடைப்பிடித்தல்.

• கட்சியில் உள்ள இளைஞர் படையணியின் செயற்பாட்டினை மேலும் ஊக்குவித்தல்.

• எதிர்கால தலைமைத்துவங்களை அடையாளப்படுத்தத்தக்கதான செயற்பாட்டினைத் தலைமைத்துவம் மேற்கொள்ளுதல். குறிப்பாக மாற்றுத் தலைமைத்துவங்களில் கவனம் செலுத்துதல். உள்ளுர் அரசியல் தலைமைத்துவம் தொடர்பிலும் கட்சி இக்கொள்கையினைக் கடைப்பிடித்தல்.

• சமூகத்தின் சகல பிரிவினரையும் கருத்திற் கொள்ளத்தக்கதான செயற்பாட்டில் கட்சி கரிசனையுடன் செயற்படல்.

• கட்சியின் பிரதேச மட்ட இணைப்பாளர்களின் சமூக அங்கீகாரம், ஒழுக்கம் சார்ந்த செயற்பாடுகள், மக்களோடு தொடர்பு கொள்ளும் விதம் என்பவற்றில் கூடிய கவனம் எடுத்தல்.

• முஸ்லிம்களின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளை சர்வதேச மயப்படுத்துதல்.

• இலங்கையுடன் நெருக்கமாகச் செயற்படும் முஸ்லிம் நாடுகளுடன் தொடர்புகளைப் பேணி முஸ்லிம்களின் நலன்கள் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்தல்.

• முஸ்லிம்களின் பிரச்சினையினை சர்வதேச மயப்படுத்தும் விடயத்தில் கட்சி கவனம் செலுத்தத்தக்கதான பிரிவுகளை கட்சியில் உருவாக்குதல். குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுடன் தொடர்பாடல்களை விருத்தி செய்து முஸ்லிம் பிரதேசங்களை அபிவிருத்தி செய்யத்தக்கதான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கென கட்சியில் தனிப் பிரிவொன்றினை அறிமுகம் செய்தல். அதன் மூலம் இரு தரப்பு, பல்தரப்பு உடன்பாடுகளை விருத்தி செய்தல்.

• முஸ்லிம் புலம்பெயர்ந்தோருடனான தொடர்பாடல்களையும் கட்சி விரிவுபடுத்த வேண்டும்.

• முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் அரசியல், சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளை ஆவணப்படுத்துதல். அதற்கென கட்சி கல்வியலாளர்களைக் கொண்ட தனியான பிரிவினைக் கொண்டு செயற்படுதல் வரவேற்கத் தக்கதாகும்.

• முஸ்லிம் கல்வி நிறுவனங்கள், துறைசார் நிபுணர்கள் வட்டம் ஒன்றினை கட்சியின் அனுசரனையுடன் ஏற்படுத்துதல்.

• முஸ்லிம்களின் தேசியப் பிரச்சினை விடயத்தில் இதர முஸ்லிம் கட்சிகள், அரசியல் தலைமைகளுடன் இணைந்து செயற்படுதல்.

• கட்சியின் சகல மட்டங்களிலுமான உறுப்பினர்கள், தொண்டர்களுக்கு தொடர்பாடல், தலைமைத்துவம், பிரச்சினைகளைக் கையாளுதல், சமூக முகாமைத்துவம் உள்ளிட்ட விடயங்களில் பயிற்சியளித்தல். அதற்கென கட்சி தனியான பிரிவொன்றினை அமைப்பதும் வரவேற்கத்தக்கது.

• கட்சியின் அங்கத்துவத்தினை வருடாந்தம் அதிகரித்தல். நவீன தொடர்பாடல் நுட்பங்களினூடாக அவர்களுடன் நெருக்கமான தொடர்பினைப் பேணுதல். அதன் மூலம் கட்சியுடனான அவர்களின் ஆதரவினைத் தக்கவைத்துக்கொள்ள முடியும். கட்சி அங்கத்துவம் தொடர்பிலான பதிவொன்றினை கட்சி பேணிவருவதுடன் அதனை மக்கள் மயப்படுத்தி அங்கத்துவத்தினை அதிகரிப்பதன்பால் கூடிய கவனம் செலுத்தலாம்.

• கட்சிக்கொள்கையில் இனத்துவம் சார்ந்த சர்ச்சைக்குரிய விடயங்களுக்கு முன்னுரிமையளிப்பதிலிருந்து விலகி தேசிய ரீதியான சமூக அரசியல் விடயத்திற்கு முக்கியத்துவமளித்தல்.

• வருடாந்த, அரையாண்டு, காலாண்டு, மாதந்த கூட்டங்களை தேசிய மற்றும் பிரதேசமட்டத்தில் ஏற்பாடு செய்தல். குறிப்பிட்ட கூட்டங்களுக்கான தலைமைப் பொறுப்புக்களை ஒப்படைத்தல். அவற்றின் தொடர்ச்சியினை உறுதிசெய்தல்.

• தமிழ் மற்றும் சிங்கள மக்களுடன் தொடர்புகளைப் பேணத்தக்கதான குழுக்களை உருவாக்குதல். அம்மக்களையும் கட்சியோடு இணைத்துக்கொள்வதின்பால் அக்கறை காட்டுதல்.

• பெண்களின் அரசியல் ஈடுபாட்டினை அதிகரிக்கத்தக்கதாக கட்சியில் பெண்கள் பிரிவொன்றினை ஏற்படுத்தல். அவ்வாறான பிரிவுகள் இருக்குமிடத்து அப்பிரிவின் செயற்பாடுகளை விஸ்தரித்தல்.

• கட்சித் தலைமைத்துவம் அரசாங்கத் தலைவருடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை மேற்கொள்வதன் மூலம் தற்போது எழுந்திருக்கும் மத ரீதியான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வரல். குறிப்பாக ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்புச் அமைச்சர் போன்ற முக்கிய பகுதியினருடன் தொடர்புகளை ஏற்படுத்துவதில் முஸ்லிம் காங்கிரஸ் விரைந்து செயற்பட வேண்டும்.

• கட்சிக் கட்டமைப்பிலும் ஏனைய பதவிகளின் போதும் குடும்ப மற்றும் பிரதேசவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தல்.

• கட்சி திறந்ததன்மை, வினைத்திறன், மக்கள் பங்கேற்பு போன்ற விடயங்களை கருத்திற்கொள்ளுதல்.

முடிவுரை

1980களில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் அரசியல் கட்சியானது முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி அவர்களின் தனித்துவத்தைப் பேணுவதற்கான ஒரு காலத்தின் தேவையாகத் தோற்றம் பெற்றது. அஷ்ரப் அவர்களின் அரசியல் முதிர்ச்சி, துணிகரச் செயற்பாடுகள் போன்றவற்றின் ஊடாக தான் பெற்றுக் கொண்ட அமைச்சின் மூலம் தமது சமூகத்தினை ஒரு எழுச்சி நிலைக்கு கொண்டுவர இடம் விட்டது. அவருடைய மறைவு, கட்சிக்கும் இலங்கை முஸ்லிம்களுக்கும் ஒரு சோதனையாக அமைந்தது. கட்சியின் புதிய தலைமைத்துவமான றஊப் ஹகீம் அவர்கள் கட்சியைப் பாதுகாப்பதிலேயே அதிக கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகியது. இவ்வேளையில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தினால் தொடர்ச்சியாக வடகிழக்கு முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். யுத்தத்திற்குப் பின்னரான பெரும்பான்மை கடும்போக்குவாத அமைப்புகளின் செயற்பாடுகளால் குறிப்பாக தென்னிலங்கை முஸ்லிம்களும் முஸ்லிம்களின் கலாசாரமும் முற்றுகைக்குட்படுத்தப்பட்டிருப்பதனை அவதானிக்க முடிகின்றது. இச்சூழ்நிலைகளின் கீழ் அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் பிரமிக்கத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியதன் விளைவாக றஊப் ஹகீம் அவர்களுக்கு பிரதான அமைச்சுப் பதவியொன்றைப் பெற வாய்ப்பளித்திருக்கின்றது. நலிவுற்றிருக்கும் கட்சியினை மீளப் புனரமைப்பதனூடாவும் தலைமைத்துவத்தின் பொறுப்பு வாய்ந்த செயற்பாடுகளினூடாகவும் இலங்கை முஸ்லிம்களின் பாதுகாப்பும் அபிவிருத்தியும் உறுதி செய்யப்பட வேண்டிய தேவை இருக்கின்றது. மிக முக்கியமாக கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய விடயம் என்னவெனில் 1994இல் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் திகழ்ந்தது போன்று 2015இன் புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்ததிலும் இக்கட்சிக்கு கணிசமான பங்களிப்பு இருக்கின்றது என்றால் அதனை யாரும் மறுதலிக்க முடியாது.

 

(எம்.எம்.பாஸில் & எம்.ஏ.எம்.பொளசர்)
அரசியல் விஞ்ஞானத் துறை
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்.

 

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...20761
மொத்த பார்வைகள்...2077685

Currently are 466 guests online


Kinniya.NET